|
சர்வதேச குழு: கட்டாரின் புதிய வெளியீடான முஸ்ஹப் குர்ஆனில் காணப்படும் எழுத்தணிக் கலை இஸ்லாமிய எழுத்து வடிவங்களை மீளுருவாக்கம் செய்வதாக அமைந்துள்ளது.
அனைத்து விடயங்களும் ஒரே அழுத்தில் கிடைக்கும் படியான இன்றைய வேகமான யுகத்தின் கலாசாரத்திற்கு ஏற்ற அழகிய வடிவில் இக்குர்ஆன் பிரதி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த பிரதியிலுள்ள எழுத்தணி வடிவத்திற்கு புதிய வரவேற்புக் கிடைத்துள்ளது என அக்லாம் கண்காட்சியில் கலந்து கொண்ட முன்னணி எழுத்தணிக் கலைஞர்கள் உறுதிப்படுத்தினர்.
இஸ்லாமியக் கலை என்பது, இனறு உலகின் முக்கிய கலையொன்றாக வளர்ந்து வருகின்றது என முஸ்ஹப் குர்ஆன் போட்டியின் ஏற்பாட்டாளர் சபாஹ் அல்அர்பிலி தெரிவித்தார்.
கடந்த பத்து வருடங்களின் பின், இந்த கலையைக் கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகின்றது. எழுத்தணிக்கான மவுசும் அண்மைக்கால போட்டிகள், கண்காட்சிகள் மற்றும் உலகளாவிய வர்த்தகம் என்பவற்றின் மூலமாக அதிகரித்து வருகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.
எழுத்தணிக்கலை மிக அற்புதமான ஒரு கலையாகும். அது வரலாற்று அறிவை வேண்டி நிற்கின்றது. மிகவும் நிபுணத்துவமும் கலைநுட்பமும் வாய்க்கப் பெற்றவர்களே அற்புதமான படைப்புகளை இக்கலையினூடாக உருவாக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, எழுத்தணிக் கலைஞர்களும் பொதுமக்களும் அக்கலையின் செய்திகளையும் அழகையும் விளங்கிக் கொள்ளும் படியாக அமைய வேண்டும் எனஸ்பானிய எழுத்தணிக் கலைஞர் நூரியா கர்சியா தெரிவித்தார்.
எழுத்தணிக் கலையின் ஒவ்வொரு எழுத்தையும் எழுதும் போது அக்கலைஞருக்கு ஏற்படும் ஆன்ம திருப்தியும் மகிழ்ச்சியும் அளப்பரியதாகும். ஏனைய கலைகளைப் போலன்றி, இஸ்லாமிய எழுத்தணிக் கலையானது மனக்கிளர்ச்சிகள், வலிகள், அழகியல் உணர்வுகள் மற்றும் அரபு இஸ்லாமிய கலாசாரப் பிணைப்பு என்பவற்றை மிகச் சிறப்பாக வெளிப்படுத்துகின்றது எனவும் அவர் தெரிவித்தார்.
பாரம்பரியமாக, கலைக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகின்றது. அது புனித அல்குர்ஆனின் அழகைப் பாதுகாப்பதற்கான ஒரு வழியெனவும் கருதப்படுகின்றது. ஏழாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட குர்ஆனின் பழமையான எழுத்து முறையை, தற்போதைய முஸ்ஹப் குர்ஆனின் நவீன எழுத்தமைப்பு பிரதியீடு செய்ய முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
551666
|