தூனிசியாவின் மூன்றாவது சர்வதேச குர்ஆன் போட்டி, ஆகஸ்ட் 25ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பர்டூ நகரில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஆகஸ்ட் 29ம் திகதி வரை இடம்பெறவுள்ள இப்போட்டியில் 24 நாடுகளைச் சேர்ந்த 44 குர்ஆனிய காரிகளும் ஹாபிழ்களும் கலந்து கொண்டுள்ளனர் என டேப்.இன்போ இணையத்தளம் தெரிவிக்கின்றது.
ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற அங்குரார்ப்பண வைபவத்தில் உரையாற்றிய தூனிசிய பிரதமர் அலி லராயித், சர்வதேச குர்ஆனிய நிகழ்வுகளை நடத்துவதன் நோக்கம் முஸ்லிம்கள் மத்தியில் நல்லுறவை விரிவுபடுத்துவதாகும் என்றார்.
இப்போட்டியின் நோக்கம், முஸ்லிம் சகோதரத்துவத்தை வலுப்படுத்துவதும் இளைஞர்களை குர்ஆனின் பால் ஊக்குவிப்பதும் இஸ்லாமிய போதனைகளுடன் அவர்களை மேலும் பரிச்சயமாக்கி வைப்பதுமாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
விழாவில் உரையாற்றிய மற்றொரு பேச்சாளரான இஸ்லாமிய விவகார அமைச்சர் நூருல்லாஹ் காதிமி, குர்ஆனிய ஹாபிழ்களையும் பயிற்றுவிப்பது மற்றும் விரைவில் குர்ஆனிய கல்லூரியொன்றை ஸ்தாபிப்பது ஆகிய தூனிசிய அரசாங்கத்தின் நிகழ்ச்சித் திட்டங்களுள் ஒன்றாக இப்போட்டி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது என்றார்.
தூனிசியாவின் முப்தி, குர்ஆனிய மற்றும் இஸ்லாமிய அதிகாரிகள் மற்றும் சமூக விவகாரங்களுக்கான அமைச்சர், மற்றும் முஸ்லிம் நாடுகளின் தூதுவர்கள் போன்றோரும் இவ்வங்குரார்ப்பண வைபவத்தின் போது பிரசன்னமாகியிருந்தனர்.
ஷைக் முஹம்மத் பின் யாலுஷா சர்வதேச குர்ஆன் போட்டி எனத் தலைப்பிடப்பட்டுள்ள இப்போட்டியில் ஈரான், துருக்கி, பலஸ்தீன், நைஜீரியா, இந்தோனேசியா, கட்டார். எகிப்து, மற்றும் ரஷ்யா உள்ளிட்ட 24 நாடுகள் போட்டியிடுகின்றன.
மஹ்தி ஷாயிக் மற்றும் முஹம்மத் மஹ்தி ஹக்கோயான் ஆகியோர் முறையே குர்ஆன் பாராயணம் மற்றும் குர்ஆன் மனனம் ஆகிய பிரிவுகளில் ஈரான் சார்பாகப் போட்டியிடுகின்றனர்.
1277496