ஷீஆக்கள் எகிப்திய சனத்தொகையில் மிகப் பெருந்தொகையைக் கொண்டிருப்பதுடன், ஷீஆஇஸத்தின் கோட்பாடுகள், ஏனைய சமய சிந்தனைப் பள்ளிகளின் கோட்பாடுகளைப் போன்று அல்அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் போதிக்கப்படுகின்றன என எகிப்தின் ஷீஆ இயக்கத் தலைவர் முஹம்மத் கனீம் குறிப்பிட்டதாக அல்துஸ்தூர் தினசரி தெரிவிக்கின்றது.
ஏனைய நான்கு சிந்தனைப் பள்ளிகளைப் போன்று ஷீஆஇஸமும் அங்கீகரிக்கப்பட வேண்டிய தேவை குறித்தும் கனீம் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி ஆலோசகர் அஹ்மத் அல்முஸ்லமானியைச் சந்தித்து, இது தொடர்பாகத் தாம் கலந்துரையாடவுள்ளதாகவும், ஷீஆக்கள் தமது சமய சிந்தனைகளைப் போதிக்க அனுமதித்தல் மற்றும் பாராளுமன்றத்தில் ஷீஆ பிரதிநிதிகளுக்கென ஆசனங்கள் ஒதுக்கப்படுவது என்பன தொடர்பாக கோரிக்கை விடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, சலபி பிரிவினைவாதக் குழுக்களின் தலைவரான நாசிர் ரிஸ்வான், அங்கீகரிக்கப்பட்ட சிந்தனைப் பள்ளிகளின் பட்டியலிலிருந்து ஷீஆஇஸத்தை அகற்றிவிட வேண்டுமென வலியுறுத்திப் பேசிவருகின்றார்.
ஷீஆஇஸம், இஸ்லாமிய சிந்தனைப் பள்ளிகளைச் சேர்ந்ததில்லை எனவும் இஸ்லாமிய வழிமுறைக்கு உட்பட்டதல்ல எனவும் சலபித் தலைவர் பிரசாரம் செய்து வருகின்றார்.
80 மில்லியன் சனத்தொகை கொண்ட எகிப்தில் சுமார் ஒரு மில்லியன் ஷீஆ சமூகத்தினர் வாழ்கின்றனர்.
1297941